# இதழ்கள், அக்கரங்கள் :-
இதழ் = இலை, உதடு, கண்ணிமை, கதவினிலை, பனையோடு, பாளை, பூவிதழ்
அக்கரம் = அசை, அசரம், அழியாதது,ஆகாயம், உயிரெழுத்து,எழுத்து, வரையப்பட்ட வாசகம், பிரணவ மந்திரம், சலம், சொல், நித்தியானந்தம், நோயில் ஒன்று, பிரமம், மந்திர எழுத்து, மாமரம், வெள்ளெருக்கு, பீசம்
இங்கு இதழ் என்பதை ஒரு கொள்கலன் எனக் கொள்ளலாம். இதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அக்கரம் எழுதப்பட்டிருக்கும்.
பீசமாகிய அக் + கரத்தால்தான் முத்தி கிட்டும்.
ஆறு ஆதாரங்கள்
****************************
இவை இரு வகைப்படும்.
1.கீழாதாரங்கள் – 6
2.மேலாதாரங்கள் – 6
இவைகள்(இதழ்கள், அக்கரங்கள்) கண்ணுக்குப் புலப்படாது.
கீழாதாரங்கள் உடலிலும், மேலாதாரங்கள் தலைக்குள் மட்டும் இருப்பவை.
கீழாதாரங்கள் பிண்ட ஆதாரங்கள்.
மேலாதாரங்கள் சூக்கும ஆதாரங்கள்.
கீழாதாரங்கள் ஆறு:-
***************************
1.மூலம் – மூலாதாரம்
2.கொப்பூழ் – சுவாதிட்டானம்
3.மேல்வயிறு – மணிபூரகம்
4.நெஞ்சம் – அநாகதம்
5.மிடறு – விசுத்தம்(விசுத்தி)
6.புருவநடு – ஆக்ஞேயம்.
மூலம் என்னும் மூலாதாரம்
****************************************
குதம் என்னும் மலவாய்(எருவாய்), நீர்த்தாரை(மரும இடம்) ஆகியவற்றின் நடுவில் குண்டலி வட்டமும், அதனுள்ளே முக்கோண சக்கர வடிவமும், அதன் நடுவே நான்கு இதழ்கொண்ட கடம்ப மலரும், அதன் உள்ளே ஓங்கார வட்டமும், அதனுள்ளே “ஓம்” என்னும் பிரணவமும் அமைந்திருக்கும். ஓங்காரத்தில் ஒளிவீசும் “அ”காரத்தில் மாணிக்க வண்ணமுடைய கணேசரும், முக்கோணத்தில் ஒளிவீசும் “உ”காரத்தில் மரகத வண்ணமுடைய வல்லபை சக்தி அமர்திருக்க, கோணத்தின் முனையில் குண்டலி சக்தியானவள் எட்டு இதழ்களுடைய வாழைப்பூ தலைகீழாகத் தொங்குவதுபோலிருப்பாள். இவ்வெட்டு இதழ்களும் அட்டசக்திகளெனப்படும் எட்டு இலக்குமிகளாவார்கள்.
மண்(பிருதிவி) தத்துவம் .
எடுத்துக்காட்டாக மூலாதரத்தின் படம் ஒன்று இணைத்துள்ளேன். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு அக்கரம் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வக்கரங்களை ஒன்றுகூட்டிச் செபிக்கப் பலன் கிட்டும்.
2.கொப்பூழ் – சுவாதிட்டானம்
*************************
இது மூலாதாரத்திற்கு நான்கு அங்குலம் மேல் உள்ள இலிங்கத்துக்கும், நாபி எனப்படும் கொப்பூழுக்கும் நடுவில் உள்ளது. நாபியைக் குய்யம் என்பதுவுமுண்டு. இது நாற்சதுர வீடு. இதன் நடுவில் ஆறிதழ் தாமரை வட்டமும், அதன் நடுவே “ந”கார எழுத்தும் உடையது. அந்த நகார வட்டமாம் இலிங்க பீடத்தின் நடுவே அக்கினிபோல் செந்நிறத்தையுடைய பிரும்மனும், சரசுவதி தேவியும் கொலுவீற்றிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
3.மேல்வயிறு – மணிபூரகம்
*************************
இது சுவாதிட்டானத்திற்கு மேல் ஆறங்குலத்தில் உள்ள நாபி என்னும் உந்தி எனச் சொல்லப்படும் இடம். உந்தி என்பதை உன்+தீ என்பார். இது கோழி முட்டையைப்போல் 1008 நரம்பு நாடிகள் சூழப்பட்டுள்ளது. இதுதான் நாடி நரம்புகளுக்கெல்லாம் ஆதாரத் தானம். இது நீர் தத்துவம். எட்டு நாட்பிறை போன்ற வடிவமும் அதன் நடுவே 10 இதழ் தாமரை வட்டமும். அதன் நடுவே “ம”கார எழுத்தும், அதன் நடுவே மரகத வண்னமான மகாவிட்டுணுவும், மகா இலக்குமியும் கொலுவிருப்பதாய்க் கூறப்பட்டுள்ளது. இதில் மின்னல் போல் பிரகாசம் தோன்றும்.
4.நெஞ்சம் – அநாகதம்
********************
இது மணிபூரகத்துக்கு 8 அங்குலம் மேல் இருதயத் தானத்தில் முக்கோண வடிவாய் உள்ளது. இதன் நடுவே 12 இதழ்த் தாமரையும், அதன் நடுவே “சி”கார அட்சரமும் தோன்றும். அதிலே உருத்திரனும், பார்வதியும் கொலுவிருப்பர். அங்கு மின்மினியின் பிரகாசம் தோன்றும். இது வாயுவாம் தேயுவின் கூறு. இதை இருதயக் கமலம் என்பர்.
5.மிடறு – விசுத்தம்(விசுத்தி)
*************************
இது அநாகதத்திற்கு 12 அங்குலத்துக்கு மேல் உள்ள கண்டம் என்னும் தானத்தில் அறுகோண வடிவாயிருக்கும். அதன் நடுவே 16 இதழ்த் தாமரையும், அதன் நடுவே “வ”கார அட்சரமும் பிரகாசிக்கும். அவ்வட்சரத்தின் நடுவே மேகவண்ணத்துடன் மகேசுவரனும், மகேசுவரியும் கொலுவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
6.புருவநடு – ஆக்ஞேயம்.
**********************
விசுத்திக்கு 16 அங்குலத்துக்குமேல் நெற்றியில் புருவமத்தியில், இரண்டிதழ் கொண்ட தாமரையும் அதன் நடுவே “ய”காரமும், அதன் நடுவே சதாசிவனும், மனோன்மணியும் கொலுவிருப்பதாகக் கூறுவர். இது சூரியனின் ஒளியோடு இருக்கும் ஆகாயத்தின் கூறு.
இவ்வாறு ஆதரங்கள் அல்லாது ஏழாம் ஆதாரம் ஒன்றுளது. அது கீழாதரம், மேலாதாரம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும்(பொது). அதுவே பிரம்மரந்திரம்.
பிரம்மரந்திரம்
************
ஆக்கினைக்கு எட்டு அங்குலத்திற்குமேல் சகத்திரதளமெனப்படும், ஆயிரவிதழ் அல்லது ஆயிரதெட்டிதழ் தாமரை எனச் சொல்லப்பட்ட இதழ்களையுடைய ஒரு தாமரைப்பூ உள்ளது. அதில், நாதவிந்துத்தானம் ஐங்கோணத்துள் ஓரிதழ்த் தாமரையாய் உளது. இதுவே, பரகாயமெனவும், பிரம்மரந்திரமெனவும் சொல்லப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக